Monday, July 3, 2017

இந்தியா

இந்தியா

1. அலவன்ஸ் தொடர்பான 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அலவன்ஸ் தொடர்பான 7 ஆவது ஊதியக்குழுவின் 34 திருத்தங்கள் கொண்ட பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2. சென்னை-பெங்களூரு-மைசூரு இடையே 300 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்க திட்டம்
சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரு வரையிலான 450 கிலோ மீட்டர் தூர ரெயில் பாதையில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்களை இயக்கும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

3. ரேஷனில் வழங்கப்படும் உணவு பொருட்களுக்கு மேலும் ஓராண்டுக்கு விலை உயர்வு இல்லை: மத்திய அரசு முடிவு
ரேஷனில் வழங்கப்படும் உணவு தானியங்களின் விலையை மேலும் ஓராண்டுக்கு உயர்த்துவது இல்லை என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

4. இந்த பிரிவில் மட்டும் ரூ.1,470 கோடி வருமானம் ஈட்டிய இந்திய ரயில்வே
2016-2017 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் ரயில்வே டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டதில் மட்டும் ரூ.1470 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 25.29 சதவிகிதம் அதிகம் ஆகும்.

5. தமிழில் ரெயில் டிக்கெட்டுகள் வழங்க நடவடிக்கை - பொங்கல் முதல் அமல்படுத்த திட்டம்
ரெயில் டிக்கெட்டுகள் தமிழில் வழங்கப்பட உள்ளதாகவும், வரும் பொங்கல் பண்டிகை முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் பயணிகள் வசதி மேம்பாட்டுக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.


உலகம்

1. அதிநவீன போர்க் கப்பலை அறிமுகப்படுத்தியது சீனக் கடற்படை!
சீனக் கடற்படை, 10 ஆயிரம் டன்கள் எடையைத் தாங்கும் வகையிலான அதிநவீன போர்க்கப்பலை அறிமுகப்படுத்தியது. இந்தப் போர்க்கப்பல், இந்தியா மற்றும் அமெரிக்கக் கடற்படைக்கு கடும் சவாலாக விளங்கும் என்று கருதப்படுகிறது.
ஷாங்காய் நகரில் அமைந்துள்ள ஜியாங்னன் கப்பல் கட்டுமானத் தளத்தில் 055 டிஸ்ட்ராயர் வகை போர்க்கப்பலை சீனக் கடற்படை அறிமுகப்படுத்தியது.
இந்தக் கப்பல் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது ஆகும். டிஸ்ட்ராயர் வகை போர்க்கப்பல்களில் இது அடுத்த தலைமுறைக் கப்பலாகும். இந்தப் போர்க்கப்பலில் நவீன ரக ஏவுகணைகளும், எதிரிநாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கும் ஆயுதங்களும் இருக்கும்.
மொத்தம் 10ஆயிரம் டன்கள் எடையைத் தாங்கும் வகையில் இந்தப் போர்க்கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 போர் விமானங்களையும் இந்தக் கப்பலில் நிறுத்த முடியும்.

2. உலக புத்தகத் தலைநகர் ஷார்ஜா: யுனெஸ்கோ அறிவிப்பு!
2019-ஆம் ஆண்டுக்கான உலகப் புத்தகத் தலைநகராக ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரை ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து "நீங்கள் இருப்பது ஷார்ஜா, எனவே படியுங்கள்" என்ற கோஷத்துடன், சிறப்பு பதிப்பக மண்டலங்களை உருவாக்குவது, பல்வேறு மாநாடுகளை நடத்துவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஆறு மாதங்களுக்கு நடத்தப்படும் என்று யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டில் உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினமான ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி இந்த நிகழ்ச்சிகள் தொடங்கும் என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. கடந்த 2003-ஆம் ஆண்டின் உலக புத்தகத் தலைநகராக தில்லி தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டு

1. விம்பிள்டன் டென்னிஸ் தரவரிசை: முதல் முறையாக முதலிடத்தில் முர்ரே!!!
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், பிரிட்டன் வீரரும், உலகின் முதல் நிலை வீரருமான ஆன்டி முர்ரே முதல் முறையாக போட்டித் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வரும் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அந்தப் போட்டிக்கான தரவரிசை வெளியிடப்பட்டது.
இதன்படி, நடப்புச் சாம்பியனான ஆன்டி முர்ரே முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (2), ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் (3), ஸ்பெயினின் ரஃபேல் நடால் (4), ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா (5) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
இதனிடையே, மகளிர் பிரிவு தரவரிசையில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் முதலிடத்தில் உள்ளார். ருமேனியாவின் சைமோனா ஹேலப் 2-ஆவது இடத்திலும், செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா 3-ஆவது இடத்திலும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா (4), டென்மார்கின் கரோலின் வோஸ்னியாக்கி (5) இடத்திலும் உள்ளனர்.

2. ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: வரலாறு காணாத வகையில் அதிகரித்த பங்கேற்பாளர்கள்!
22-ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் வரும் ஜூலை 6 முதல் 9-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 1000-க்கும் அதிகமான வீரர்/வீராங்கனைகள் பங்கேற்க உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2015-ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் நடைபெற்ற கடந்த சீசனில் 40 நாடுகளைச் சேர்ந்த 497 வீரர்/வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், இந்த சீசனில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் இரட்டிப்பாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் போட்டிக்காக கலிங்கா விளையாட்டு அரங்கத்தில், தடகள சம்மேளனங்களுக்கான சர்வதேச சங்கத்தின் (ஐஏஏஎஃப்) தர மதிப்பீடுகளை பூர்த்தி செய்யும் வகையில் சர்வதேச தரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

3. டாப் 10 வீரரை வீழ்த்தி அதிர்ச்சி ஏற்படுத்திய தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன்!
துருக்கியில் நடைபெற்று வரும் அண்டல்யா ஓபன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 222-ம் இடத்தில் உள்ள ராம்குமார் ராமநாதன், உலக அளவில் எட்டாம் நிலையில் உள்ள டொமினிக் தீமைத் தோற்கடித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். ராம்குமார் 6-3, 6-2 என்கிற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.


விருதுகள்

1. அமெரிக்காவில் இந்தியக் காவல் துறை அதிகாரிக்கு விருது!
ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பாகப் பணிபுரிந்ததற்காக அமெரிக்க அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதுக்கு இந்த ஆண்டில் தெலங்கானா மாநிலம், ரச்சகொண்டா நகர காவல் துறை ஆணையர் மகேஷ் முரளிதர் பகவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


முக்கிய நியமனங்கள்

1. கேரள டிஜிபியாக லோக்நாத் பெஹேரா மீண்டும் நியமனம்
கேரள காவல்துறை டிஜிபியாக லோக்நாத் பெஹேரா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

2. ஏஐசிஎஃப் தலைவராக வெங்கட்ராம ராஜா தேர்வு!
அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் (ஏஐசிஎஃப்) தலைவராக பி.ஆர்.வெங்கட்ராம ராஜா ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏஐசிஎஃப் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கட்ராம ராஜா, 2017-2020 வரையிலான காலகட்டத்தில் தலைவர் பொறுப்பில் இருப்பார்.
அதேபோல் தில்லியைச் சேர்ந்த பரத் சிங் செளஹான், கெளரவ செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்தப் பொறுப்பில் வி.ஹரிஹரன் இருந்தது குறிப்பிடத்தக்கது.


அறிவியல் தொழில்நுட்பம்

1. காயானாவில் இருந்து ஏவப்பட்டது இஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கைகோள் - வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
தொலைத்தொடர்பு, டிடிஹெச் (DTH) சேவை மேம்பாட்டுக்காக ஜிசாட்-17 செயற்கைகோளை லத்தீன் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவிலிருந்து, ஏரியன்-5 ராக்கெட் மூலம் இஸ்ரோ அனுப்பியது.
அதிக எடைகொண்ட இந்த ஜிசாட்-17 செயற்கைக்கோள், அனுப்புவதற்கான மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்பு இன்னும் இஸ்ரோ ஏவுதளத்துக்குக் கொண்டுவரப்படவில்லை என்பதால், ஃப்ரெஞ்ச் கயானாவிலிருந்து ஜிசாட்-17 செலுத்தப்பட்டது.
ஜிசாட்-17 செயற்கைகோள் 3,477 கிலோ எடைகொண்டது. இதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகள். இது இந்தியாவின் 18வது தொலைத்தொடர்பு மேம்பாட்டு செயற்கைகோள் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருளாதாரம்

1. ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு அனுமதி: அருண் ஜேட்லி!
ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்க கொள்கை ரீதியில் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனம் 140 விமானங்களைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 41 சர்வதேச மற்றும் 72 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்த விமானங்கள் தவிர, மும்பையில் 32 ஏக்கர் நிலப்பரப்பில், ஏராளமான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
புது தில்லி, லண்டன், ஹாங்காங், நைரோபி, ஜப்பான் மற்றும் மொரிஷியஸ் ஆகியவற்றிலும் ஏர் இந்தியாவின் சொத்துக்கள் உள்ளது. 2012 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிதி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கப்படுவதாக இருந்த 30,231 கோடி ரூபாயில் 23,993 கோடி ரூபாய்களை மட்டுமே வழங்கியுள்ளது.
அதேசமயத்தில் 2015-16 நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 3,587 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment