Monday, July 3, 2017

நடப்பு நிகழ்வுகள்

தமிழ்நாடு

1. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் சேர்க்கை தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2. சிறந்த தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு சுழற்கேடயம் வழங்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், மூன்று பள்ளிகளை தேர்வு செய்ய, தொடக்கக் கல்வி இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

3. வேளாண்மை, உற்பத்தி, தொழில் வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடம்
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள இந்திய மாநிலங்களின் வளர்ச்சி குறித்த புள்ளிவிவரக் கையேடு ஒன்றில் 2016-17 என்ற தலைப்பிலான ஆவணத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் துறை சார்ந்த வளர்ச்சி விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நிலையான விலைக்குறியீடுகளின் அடிப்படையில் வேளாண்துறை வளர்ச்சியில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. அம்மாநிலம் வேளாண் துறையில் வியக்கத்தக்க வகையில் 27.04% வளர்ச்சியை ஈட்டியிருக்கிறது. அடுத்ததாக அண்டை மாநிலமான தெலுங்கானா 19.07% வளர்ச்சியும், ஆந்திரா 9.20% வளர்ச்சியும் அடைந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் வேளாண்துறை மைனஸ் 8.00% வளர்ச்சியடைந்து இருக்கிறது. கடந்த 2015-16 ஆம் ஆண்டில் மைனஸ் 3.50% வளர்ச்சியை சந்தித்த தமிழக வேளாண்துறை, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியா

1. தனியார் வங்கி முறைகேடுகளையும் சிவிசி (CVC) விசாரிக்க முடியும்
தனியார் வங்கிகளில் நடைபெறும் முறைகேடுகளை விசாரிக்க மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. ஊழல் ஒழிப்புச் சட்டம் 1988-இன்படி தனியார் வங்கிகளின் மேலாண்மை இயக்குநர் மற்றும் அனைத்து அதிகாரிகளும் அரசு அதிகாரிகள் போலவே கருதப்படுவார்கள் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. 
அதன்படி, ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரணை நடத்த ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. ரிசர்வ் வங்கியிடம் உரிமம் பெற்று இயங்கி வரும் தனியார் வங்கிகளின் பணியாளர்கள் அனைவரும் மத்திய விசாரணை அமைப்பின் கண்காணிப்பில் வருவார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், வங்கிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படி தனியார் வங்கி அதிகாரிகளும் பொதுத் துறை வங்கி அதிகாரிகள் போலவே கருதப்படுவார்கள். எனவே, அவர்கள் மீது ஊழல், முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தால் அவற்றை விசாரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்றார் சிவிசி ஆணையர் டி.எம்.பாசின்.


உலகம்

1. இஸ்லாமிய நாடுகளுக்கு பயணத் தடை விதித்த டிரம்ப் அரசின் ஆணைக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!!!
ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, யேமன் ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்கா வருவதற்கான விசா வழங்குதலை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கவும், சிரியாவிலிருந்து அகதிகளை ஏற்பதை காலவரையறை இன்றி தடை செய்தும் டிரம்ப் ஆணை பிறப்பித்திருந்தார்.
அந்த உத்தரவுக்கு விர்ஜினியா மாகாணம், ரிச்மண்டில் உள்ள 5 மாகாணங்களுக்கான மேல்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் அரசு மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. அதிபரின் உத்தரவை மட்டும் கருத்தில் கொண்டு மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்குமாறு தனது மனுவில் அரசு குறிப்பிட்டுள்ளது.
பயங்கரவாதத்துக்கு ஆதரவும், பயங்கரவாதிகளுக்குப் புகலிடமும் அளிக்கும் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரத் திட்டமிடுபவர்களைக் கடுமையான சோதனைக்குப் பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கூற அதிபருக்கு அதிகாரம் உண்டு என்று நீதித் துறை செய்தித் தொடர்பாளர் சாரா இஸ்குர் ஃபுளோரஸ் தெரிவித்தார்.
இதையடுத்து அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்ப் அரசு இந்த ஆணையை அமல்படுத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளது. எனினும் டிரம்ப் உத்தரவு குறித்து அக்டோபரில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப் கடந்த வாரம் நீதிமன்றம் அனுமதித்தால் அடுத்த 72 மணி நேரத்தில் தடை அமலுக்கு வரும் என்று கூறியிருந்தார்.


விளையாட்டு

1. 300 ரன்கள்: இந்திய அணி புதிய உலக சாதனை!
ஒருநாள் போட்டியில் இந்திய அணி 300 ரன்களுக்கு அதிகமாக ரன்கள் குவித்ததன் மூலம் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை ஆஸ்திரேலிய அணி 95 முறை ஒருநாள் போட்டியில் 300 ரன்களுக்கு அதிகமாக எடுத்துள்ளது. நேற்றைய போட்டியில் இந்திய அணி 96-வது முறையாக 300 ரன்களுக்கு அதிகமாகக் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
இத்தனைக்கும் டெஸ்ட் அணிகளில் மற்ற அணிகளை விடவும் 300 ரன்களைத் தொட இந்திய அணிக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. அப்படியிருந்தும் தற்போது அதிகமுறை 300 ரன்களைக் கடந்த அணிகளில் முதல் இடத்தில் உள்ளது இந்தியா. 
அணிகள் முதல்முறையாக 300 ரன்களை எட்டிய வருடம்
1975: இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்
1978: மேற்கிந்தியத் தீவுகள் 
1992: ஜிம்பாப்வே, இலங்கை
1994: தென் ஆப்பிரிக்கா
1996: இந்தியா
அதிகமுறை 300 ரன்களைக் கடந்த அணிகள்
96 இந்தியா
95 ஆஸ்திரேலியா
77 தென் ஆப்பிரிக்கா

2. ஓசூரில் நடந்த மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில், பெங்களூரு அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் மற்றும், 30 ஆயிரம் ரூபாய் பரிசை தட்டிச் சென்றது.

3. தென்ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் 3 புதுமுகங்கள்
இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் 3 புதுமுக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

4. உலக எறிபந்து போட்டியில் சாம்பியன்: இந்திய அணியில் இடம் பெற்ற திண்டுக்கல் வீரர்கள்
காட்மாண்டுவில் நடந்த உலக எறிபந்து போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற்றதோடு, சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

5. லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்த கமிட்டி அமைப்பு இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழுவில் முடிவு
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடந்தது. லோதா கமிட்டி சிபாரிசுகளை விரைவாகவும், சிறப்பாகவும் செயல்படுத்தும் நோக்கில் 5 அல்லது 6 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும். இந்த கமிட்டி தனது அறிக்கையை இரண்டு வாரத்தில் அளிக்கும். அறிக்கை அளித்த 2 நாட்களில் அதனை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.


விருதுகள்

1. 2017-ஆம் ஆண்டிற்கான ஃபெமினா மிஸ் இந்தியா: ஹாரியானாவைச் சேர்ந்த மானுஷி சாலார் தேர்வு!
54வது ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் ஹாரியானாவைச் சேர்ந்த மானுஷி சாலார் வென்றுள்ளார். இதற்கு அடுத்ததாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சனா துவா 2ம் பரிசையும், பீகாரைச் சேர்ந்த பிரியங்கா குமாரி 3ம் பரிசையும் கைப்பற்றியுள்ளனர். 
தவிர, வினைல் பட்நாகர் மிஸ் ஆக்டிவ் கிரீடம் வென்றார். அதேசமயம் உடல் அழகிய சிறப்பு விருது வெமிகா நித்திக்கு வழங்கப்பட்டது.


முக்கிய நியமனங்கள்

1. புதிய கல்வி கொள்கையை உருவாக்க கஸ்தூரிரங்கன் தலைமையில் நியமனம்
நாட்டின் புதிய கல்விக் கொள்கையை இறுதி செய்ய, விண்வெளி விஞ்ஞானி, கே.கஸ்துாரிரங்கன் தலைமையில், ஒன்பது உறுப்பினர் உடைய குழுவை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நியமித்துள்ளது. நாட்டின் கல்விக் கொள்கையை மாற்றியமைக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவடேகர் திட்டமிட்டுள்ளார். இதற்காக, பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற, ஒன்பது உறுப்பினர்கள் உடைய குழுவை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கி உள்ளது.


முக்கிய நாட்கள் / வாரங்கள்

1. புகழ்பெற்ற அமெரிக்க பெண் எழுத்தாளர் ஹெலன் கெல்லர் பிறந்த தினம்: ஜூன் 27- 1880.
ஹெலன் கெல்லர் (ஜூன் 27, 1880- ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய அமெரிக்கப் பெண்மணி. இவர் இளம் வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவர்.
பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே பிறந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாக கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார்.
அலெக்சாண்டர் கிரகாம் பெல் ஹெலன் கெல்லரை பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளிக்கு அனுப்பினார். கிரகாம்பெல், ஆன் சல்லிவன் என்ற ஆசிரியை ஹெலன் ஹெல்லருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அடுத்த 49 ஆண்டுகள் கெல்லரும் சல்லிவனும் ஒன்றாகவே கழித்தனர்.
பிறர் பேசும்பொழுது அவர் உதடுகளில் கை வைத்து அதிர்வுகள் மூலம் அவர் பேசுவதை புரிந்துகொள்ளும் கலையை கெல்லருக்கு சல்லிவன் கற்பித்தார். மேலும், கெல்லரின் உள்ளங்கைகளில் எழுதி, எழுத்துக்களைப் புரிந்து கொள்ள பழக்கினார். 
கெல்லர் கண் பார்வையற்றோருக்கோன பிரெயில் எழுத்து முறையை கற்றுக் கொண்டார். பத்து வயது நிறைவதற்கு முன் ஹெலன் கெல்லர், கண் பார்வை அற்றோருக்கான பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்றார். 
1888-ல் ஹெலன் கெல்லர் பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளியில் சேர்ந்தார். 1904-ம் வருடம், கெல்லர், சல்லிவனுடன் நியூயார்க் சென்று அங்கேயிருந்த காது கேளாதோருக்கான ரைட்-ஹுமாஸன் பள்ளியில் சேர்ந்தார். அங்கு கெல்லருக்கு பேசக் கற்றுத்தர சாராஃபுல்லர் என்ற ஆசிரியை உதவினார். 
ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904-ம் ஆண்டு தன்து 24-வது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி காது கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்துப் இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார். 
தனது கல்லூரி நாட்களிலேயே 1903-ல் "தி ஸ்டோரி ஆஃப் மை லைப்" என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார்.


பொருளாதாரம்

1. அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
தற்போது, ஏப்ரல் மாதம் முதல் அதற்கடுத்த ஆண்டின் மார்ச் மாதம்வரை, நிதி ஆண்டு கடைப்பிடிக்கப்படுகிறது. 1867-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்த வழக்கத்தை கொண்டு வந்தனர். இதற்கிடையே, காலண்டர் ஆண்டைப் (ஜனவரி-டிசம்பர்) போலவே, நிதி ஆண்டையும் ஜனவரி மாதம் தொடங்குவது போல் மாற்ற பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment