Monday, July 3, 2017

உலக செய்திகள்:

உலக செய்திகள்:
ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பாட்டிற்கு வந்து இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. உலகின் முதல் ஏடிஎம் இயந்திரம் லண்டன், என்ஃபீடில் உள்ள பார்க்லேஸ் வங்கிக் கிளையில் நிறுவப்பட்டது. ஏடிஎம் இயந்திரம் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெபர்ட் பரோனால் கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை முதல் முறையாக சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி டிரம்புக்கும் அவரது மனைவி மெலானியா டிரம்புக்கும் புகழ்பெற்ற காஷ்மீர் கைத்தறி சால்வை, ஹிமாசலப் பிரதேசத்தின் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பல பரிசுப் பொருள்களை வழங்கினார்.

ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர் என ஆஸ்திரேலிய புள்ளிவிவரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ள வெளிநாட்டினரில் சுமார் 1.91 லட்சம் பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். சுமார் 1.63 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

உலகப் புகழ் பெற்ற ப்யூ ஆராய்ச்சி மையம் சார்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்பாக இந்தியா உள்பட 37 நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 37 நாடுகளில் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில் ரஷியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் மட்டுமே டிரம்ப் மீது நம்பிக்கை தெரிவித்தனர். மற்ற நாடுகளைச் சோந்த மக்களில் 75 சதவீதம் பேர் டிரம்பை அதிகம் கர்வம் கொண்டவராகவும் ஆபத்தானவராகவும் கருதுகிறார்கள். மூன்றில் இரண்டு பகுதி மக்கள் டிரம்ப் மீது நம்பிக்கை இல்லை என தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு சொந்தமான குரோண் எஸ்டேட்டுக்குரிய லாபம் 24 மில்லியன் பவுண்ட் அளவு (சுமார் ரூ.197 கோடி) அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ராணி இரண்டாம் எலிசபெத்தின் வருமானம் 8 சதவீத அளவுக்கு உயரும்.

தேடல் முடிவுகளுக்கு மேல், தனது சொந்த ஷாப்பிங் ஒப்பீட்டு சேவையை ஊக்குவிப்பதன் மூலம் கூகுள் நிறுவனம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக அந்த நிறுவனத்துக்கு ஐரோப்பிய கமிஷன் 2.1 பில்லியன் பவுண்ட் (சுமார் ரூ 17ஆயிரத்து 220 கோடி) அபராதம் விதித்துள்ளது. இத்தகைய செயல்களை 90 நாட்களுக்குள் அந்த நிறுவனம் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஐரோப்பிய நாடான  நெதர்லாந்துக்கு சென்று நெதர்லாந்து பிரதமர் மார்க் ரட்டேயை ஆம்ஸ்டர்டாம் நகரில் சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே சமூக பாதுகாப்பு, நீர் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு என 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

தேசிய செய்திகள்:

ஜுலை 1 முதல் பான் கார்டுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு பல்வேறு சமூகநலத் திட்டங்களின் பலன்களை பெற ஆதார் எண் கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது.

3 நாள்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தில்லி திரும்பினார்.

தனிமாநிலமாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங் மலைப் பகுதிக்கு காவல் துறை கூடுதல் ஆணையராக பதவி வகித்து வந்த ஹ_மாயுன் கபீர் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை சுமுகமாக அமல்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிறப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜூன் 28 இன்று இரவு 10 மணியளவில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கப்படும்.

பொறியியல் மாணவர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வiயில் அவர்களது திறனை மேம்படுத்திக் கொள்ள புதிய தொழில் பயிற்சித் திட்டம் ஒடிஸாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு காஷ்மீரில் அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நாளை தொடங்குகிறது.

சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஜூன் 30ம் தேதி நள்ளிரவு பாராளுமன்றத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிமுகம் செய்து வைக்கிறார். அதில் துணை ஜனாதிபதி மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

உ.பி யில் அடிக்கடி வறட்சியால் பாதிக்கப்படும் புந்தேல்கண்ட் பகுதியில் ‘நீர்த் தோழிகள்’ என்ற பெண்கள் அமைப்பு தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதி;ல் பெரும் சாதனை புரிந்து வருகிறது. குளம், கிணறுகளை தூர்வாருதல், கை பம்புகளை சரிசெய்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது.

விளையாட்டு செய்திகள்:
டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சாளர்கள் பிரிவல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சீன தைபே கிராண்ட்ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரரும், நடப்புச் சாம்பியனுமான சௌரவ் வர்மா தனது முதல் சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினார்.

பிசிசிஐ மறுசீரமைப்புக்காக லோதா குழு வழங்கிய பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக ஆராய புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்புக் குழுவில் இந்திய அணி முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி உள்ளிட்ட 7 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

டென்னிஸ் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

2022 வரை ஐபிஎல் போட்டிகளுக்கான தலைமை ஸ்பான்சர்ஷிப்பை சீன மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான விவோ தக்கவைத்துள்ளது. மொத்த ஒப்பந்தத் தொகை ரூ 2199 கோடி. முந்தைய ஒப்பந்தத்தை விட இது 554 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது. விவோ முதன்முதலாக ஐபிஎல் தலைமை ஸ்பான்சர்ஷிப்பை 2015ம் ஆண்டு பெற்றது.

இலங்கை கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தை மீறியதாக வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாவுள்ளன.

ஐசிசி மகளிர் உலக கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 107 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து பாகிஸ்தானை வீழ்த்தியது.

வர்த்தக செய்திகள்:
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.25 ஆயிரம் கோடி திரட்ட முடிவு செய்துள்ளது.

முன்னணி ஜவுளி உற்பத்தி நிறுவனமான ரேமண்ட் ரூ.1400 கோடி முதலீடு செய்ய உள்ளது. மேலும் 300 புதிய விற்பனையகங்களை திறப்பதற்கும் திட்டமிட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமராவதியில் புதிய ஆலையை திறப்பதற்காக இந்த முதலீட்டை மேற்கொள்கிறது.

பல்வேறுபட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பிராமல் குழுமத்தின் பிராமல் எண்டர்பிரைசஸ் கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.500 கோடியை திரட்ட உள்ளது.

வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் கோககோலா குளிர்பான நிறுவனம் 4000 விநியோகஸ்தர்களுக்கு ஜிஎஸ்டி தொடர்பான பயிற்சிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

சிறு தொழில் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் பயிற்சி அளிக்க கூகுள் இந்தியா நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக ‘டிஜிட்டல் அன்லாக்டு’ என்கிற திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தாலேகான் ஆலையில் தயாரான பீட் ரக கார்களை லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கி உள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ ‘ஆர்கானிக்’ உணவுப் பொருட்களுக்கு வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து, மரபணு மாற்ற விதை உள்ளிட்டவற்றை பயன்படுத்தாமல் இயற்கை உரம், விதைகள் மூலம் விளைவிக்கப்படுபவை ஆர்கானிக் உணவுப் பொருட்கள் என அழைக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment