Friday, March 9, 2018

1824-ல் ஜோசப் அஸ்பிடின் என்ற ஆங்கிலேய கட்டடத் தொழிலாளி (கொத்தனார்) முதன் முதலில் சிமெண்டைக் கண்டுபிடித்தார்.

காவலர் தேர்வு : 2018 - பொது அறிவு

வேதியியல் - அன்றாட வாழ்வில் வேதியியல்

➤ 1824-ல் ஜோசப் அஸ்பிடின் என்ற ஆங்கிலேய கட்டடத் தொழிலாளி (கொத்தனார்) முதன் முதலில் சிமெண்டைக் கண்டுபிடித்தார்.

➤ போர்ட்லேண்ட் நாட்டிலுள்ள சுண்ணாம்புக் கல்லினை இப்பொருள் ஒத்திருந்ததால் அவர் கண்டுபிடித்த சிமெண்டைப் போர்ட்லேண்ட் சிமெண்ட் என்று அழைத்தனர்.

➤ சிமெண்ட் என்பது சுண்ணாம்புக்கல், களிமண், ஜிப்சம் போன்ற பொருள்களைக் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து, வெப்பப்படுத்தி, குளிரவைத்து, பொடியாக்கிக் கிடைக்கும் ஒரு வேதிக் கலவையாகும். இது சாம்பல் நிற மாவு போன்றது.

➤ சிமெண்டுடன் நீரைச் சேர்க்கும் பொழுது சில மணி நேரத்தில் அது கெட்டித் தன்மை அடைகிறது என்று அறிகிறோம். இதற்குச் சிமெண்டின் கெட்டிப்படும் தன்மை என்று பெயர்.

சிமெண்டின் பயன்கள் :

➤ காரை, கற்காரை, வலுவூட்டப்பட்ட காரை போன்ற பல விதங்களில் சிமெண்ட் பயன்படுத்தப்படுகிறது.

காரை :
➤ காரை என்பது சிமெண்ட்டும், மணலும் நீருடன் கலந்த கலவை ஆகும். வீடுகளில் சுவர்கள் கட்டுவதற்கும், அவற்றின் மேலே பூசுவதற்கும் தரை போடுவதற்கும் காரை பயன்படுகிறது.

கற்காரை (கான்கிரீட்) :
➤ சிமெண்ட், மணல், ஜல்லிக் கற்கள், நீர் சேர்ந்த கலவையே கற்காரை ஆகும்.

➤ கட்டடங்கள், பாலங்கள், அணைக்கட்டுகள் கட்டுவதற்கு இது பயன்படுகிறது.

வலுவூட்டப்பட்ட காரை
➤ இரும்புக் கம்பிகள் அல்லது எஃகு வலைகளைக் கற்காரையோடு சேர்த்துப் பெறப்படுவதே வலுவூட்டப்பட்ட காரையாகும்.

➤ இந்தக் காரை மிகவும் வலுவானதாகவும் உறுதியானதாகவும் இருக்கும்.

➤ இது அணைக்கட்டுகள், பாலங்கள், வீட்டின் மேல்தளம் மற்றும் தூண்கள் கட்டுவதற்குப் பயன்படுகிறது.

நெகிழிகள் (Plastic):

➤ நெகிழி என்பது (பிளாஸ்டிக்) ஆகும்.

➤ குழாய்கள், பொம்மைகள், பாத்திரங்கள், எழுதுபொருள்கள், மருத்துவச் சாதனங்கள் என நெகிழியின் பயன்பாடுகள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. நெகிழி தண்ணீர்ப் புட்டிகள் இன்று இயல்பான பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. இந்த நெகிழிப் பொருள்களும் ஒருவகை வேதிப் பொருள்களே.

PET என்றால் பாலி எத்திலீன் டெரிதாலேட் ஆகும்.

➤ PET புட்டிகள் போன்றவை வெப்பத்தால் இளகி விடுகின்றன. இவற்றைக் குளிர வைத்தால் மீண்டும் உறுதியாகின்றன. இவ்வகை நெகிழிகள் வெப்ப இளகும் நெகிழிகள் (Thermo plastic) என்று அழைக்கப்படுகின்றன. பாலிதீன் பைகள், பி.வி.சி (பாலிவினைல் குளோரைடு) குழாய்கள், வாளி, சீப்பு, விளையாட்டுப் பொம்மைகள் போன்றவை வெப்ப இளகும் நெகிழிகளால் ஆனவை.

➤ சமையலுக்குப் பயன்படும் பாத்திரங்களில் உள்ள நெகிழிக் கைப்பிடிகள் வெப்பப்படுத்தினால் இளகாது. ஏனெனில் இவை வெப்ப இறுகும் நெகிழி (Thermosetting plastic) வகையைச் சேர்ந்தவை ஆகும்.

➤ பேக்கலைட் மின்சாரத்தையும், வெப்பத்தையும் கடத்தாப் பொருளாகும். இது மின்காப்புப் பொருள்கள், மின் பொத்தான்கள், சமையல் கலன்களின் கைப்பிடிகள் போன்றவற்றைச் செய்யப் பயன்படுகிறது.

➤ மெலமைன் தீப்பிடிக்காத ஒரு பொருளாகும். மேலும் இது அதிக வெப்பத்தையும் தாங்கக்கூடியது. எனவே வீட்டிற்குத் தரையிட உதவும் டைல்ஸ், சமையல் பாத்திரங்கள், தீப்பிடிக்கா உடைகள் போன்றவற்றைத் தயாரிக்க மெலமைன் பயன்படுகிறது.

No comments:

Post a Comment